4837. விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
உரை: பரந்தோடும் மனம் என்று சொல்லப்படுகின்ற சிறிய விளையாட்டுப் பயலே; எங்கும் பரந்து விரிந்து காற்று போல் அலைந்து மெலிவதின்றிப் புலன்கள் காட்டுகின்ற வழியில் ஓடி வீண் காலத்தைப் போக்காமல் ஐம்பொறிகளின் வழியாய்க் குற்ற நெறிகளின் விரைந்து புகுந்து மயங்குதல் ஒழிக; பொருள்களை ஆராய்ந்து அவற்றின் உண்மை நிலையைத் தெளிந்து ஒருபாலும் அசையாமல் எழுதி வைத்த சித்திரம் போல் அசைவின்றி இருப்பாயாக; சிறிது அசைவாயானால் அந்தக் கணத்திலேயே உன்னைச் சிதைத்துக் கெடுத்துவிடுவேன்; அன்புடன் பார்ப்பதுபோல் என்னை யார் என்று பார்க்கின்றாய்; நான் ஞான சபையில் எழுந்தருளுகின்ற சிவபெருமானாகிய முதற்பொருளுக்கு அருள் பெற்றவன் என்று பட்டம் பெற்ற மகனாவேன் காண். எ.று.
பலவேறு வகையில் பலவேறு பொருட்களை நினைந்தலையும் இயல்புடைமை பற்றி, “விரிந்த மனமெனும் சிறிய விளையாட்டுப் பயலே” என்று கடிந்துரைக்கின்றார். விடையம் புரிந்த நெறி புலன்கள் - ஈர்க்கும் வழி வகைகள். புலன் வழிச் செல்பவர் துன்புறுதல் இயல்பாதல் பற்றி, “விடையம் புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே” என்று அறிவிக்கின்றார். பொறி - கண், காது, மூக்கு, மெய், வாய் என்ற ஐந்துமாகும். புரைதல் - குற்றம் புரிதல். அன்புடையது போல் நீங்காமல் உடனிருத்தலால் மனத்தை நோக்கி, “பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய்” என்று உரைக்கின்றார். அருள் ஞானி என்ற சிறப்புப் பெற்று அருள் நெறியிலேயே நிற்பது விளங்க, “அருள் பட்டம் பலித்த பிள்ளை” என்று சொல்லுகின்றார். (4)
|