4838.

     பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
          பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
     சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
          தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
     ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
          அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
     பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
          பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.

உரை:

     பரந்த பண்புடையது என்னும் மனமாகிய பருத்த முரட்டுத் தன்மையுடைய பயலே; பலவேறு பொறிகளாகிய பொல்லாங்கு விளைவிக்கும் பையன்களோடு கூடிக்கொண்டு தொலைவிலும் அருகிலும் எங்கும் திரிந்து ஓடி ஆடி அறிவு மயங்காமல் நான் சொல்லும் ஒரு வார்த்தையை மெய்ம்மொழி என்று கருத்திற் கொண்டு ஆராய்ந்து தெளிவுற்று என் வசத்தில் அடங்கி நிற்பாயாக; இல்லையேல் உன்னை அடிவேரோடு அறுத்து எறிந்திடுவேன் எனத் திருவருள் ஆணையாகச் சொல்லுகின்றேன்; பேய் கொண்ட அறிவுருவாகிய நீ என் தன்மையை அறிய மாட்டாய் போலும்; எல்லா உலகங்களையும் படைத்த பெருமானாகிய சிவனுக்குச் செல்வாக்குப் பெற்ற பிள்ளையாவேன் என அறிவாயாக. எ.று.

     பரந்து திரிவது பற்றி மனத்தை, “பாய் மனம்” எனப் பகர்கின்றார். பராய் முருட்டு. - பருத்த முருட்டுக்களையுடைய. மனக்கட்டை - எளிதில் உடைக்க இயலாதபடி வன்மையும் முடிச்சுக்களையும் உடைய மனக்கட்டை. பராய் என்பது வன்மைமிக்க ஒருவகை மரம். அதனுடைய முருட்டுக் கட்டை போல்வது என்றற்கு இவ்வாறு கூறுகின்றார் எனினும் அமையும். படுகாளிப் பயல் என்பது படுக்காளிப் பயல் என வந்தது. படுகாளி - பொல்லாங்கு செய்பவன். இது படுகாலி எனவும் வழங்கும். அண்மை சேய்மை என்ற எவ்விடத்தும் திரிந்தலைவது பற்றி, “சேய்மை யிலும் அண்மையிலும்” எனச் செப்புகின்றார். தியங்குதல் - மயங்குதல். உள்ளத்தே நன்கு ஆய்ந்தறிதற்குரியது என்று மேற்கொண்டு அடங்குக என்பாராய், “ஆய்வுறக் கொண்டு அடங்குக” எனக் கடிந்து உரைக்கின்றார். பேயால் பீடிக்கப்பட்டது போல அலைவது பற்றி, “பேய் மதியாம் நீ” என்று மனத்தைக் கண்டிக்கின்றார். எல்லா உலகங்களையும் படைத்தருளிய பெருமானாதலால் சிவனை, “எல்லாம் பெற்றவன்” என்று சிறப்பிக்கின்றார்.

     (5)