4840.

     கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
          கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
     நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
          நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
     அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
          அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
     அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
          ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.

உரை:

     கலைத்திறம் அறியாத சித்தம் எனப்படுகின்ற மிகுந்த மோசத்தைச் செய்யும் பயலே; காணப்படும் பொருட்களின் தலைகால் அறியாமல் காணத் தகுவன கண்டறியாமல் பொருள்களின் தன்மையையும் அறியாமல் ஒன்றைப் பிறிதொன்றாகக் கண்டு உலகவர் உள்ளத்தை நெறி மயங்குமாறு மயக்குகின்றாய்; நீயோ என்னிடத்தில் நெருங்குகின்றாய்; நெருங்கி இருக்க வேண்டுமாயின் அலையில்லாத கடலைப் போல அசைவற்று என்வசம் நிற்பாயாக; சிறிது அசைவாயாகிலும் அந்தக் கணத்திலேயே உன்னை நான் அடக்கி ஒடுக்கி விடுவேன்; உள்ளத்தை அலைக்கும் செயலை அறிந்த நீ என் தன்மையை அறியாய் போலும்; ஆண்டவனுடைய அம்பலக் கூத்தைக் கண்டு அன்புற்றுப் பிள்ளையாவேன் என அறிவாய். எ.று.

     பொருள்களின் அமைப்பில் விளங்குவது கலை; அதன் உண்மைத் தன்மை நோக்காமல் பிறிதொன்றாகக் கருதுவதும் அத்திரிபுணர்ச்சி யிலேயே இயங்குவதும் சித்தத்தின் இயல்பு. அதனால் அதனுடைய செயல் பலவும் திரிபுடையவாய் நெறி தவறுகின்றன என்பது விளங்க, “ஒன்றை ஒன்றாக நிச்சயித்து இவ்வுலகை நெறி மயங்க மயக்குகின்றாய்” என்று கூறுகின்றார். திரிபுணர்ச்சி வடிவாகிய நீ தெளிவுருவாகிய என்பால் அடைதற்குரியை அல்லையெனக் கடிந்துரைப்பாராய், “நீயோ இங்குறுவாய்” என்று ஏசுகின்றார். ஒருகால் என்பால் அடைகு வையேல் என் கருத்தின்வண்ணம் அசைவின்றித் தெளிவு நிலையில் நிற்றல் வேண்டும் என்றற்கு, “அலையறியாக் கடல்போலே அசைவற நின்றிடு” என உரைக்கின்றார். திரிபுருவாய் யாரையும் அலைக்கின்ற நீ என்னை அறிந்திருத்தல் வேண்டும்; என் இயல்பை அறிந்திருக்க வேண்டும் என உரைப்பாராய், “அலைவறிவாய் என்றனை நீ அறியாயோ” எனவும், தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு காட்டற்கு, “நான்தான் ஆண்டவன் தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காண்” எனவும் விளம்புகின்றார்.

     (7)