4841. அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
சுகங்காண என்றனைநீ அறியாயோ நான்தான்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
உரை: அகங்காரம் எனப்படுகின்ற பிடிவாத இயல்புடைய பயலே; பொருள்களை அடுக்கடுக்காய்க் கண்டு அந்தக் காட்சியிலே என்னை அடுத்தடுத்து முடுக்க முயலுகின்றாய்; உலகத்தவர் யாவரும் காணத் தலைகால் தெரியாமல் அலைந்து திரிகின்ற உன் செயல் கண்டு ஒன்றும் ஒருசிறிதும் என்னிடம் செல்லாது; இவ்வுலகம் முழுதும் காணும்படி என்பால் நீ அடங்கி நடத்தல் வேண்டும்; அடங்காவிடில் கணப்பொழுதில் நீ இருந்த இடம் தெரியாதபடிப் பொசுக்கிக் கெடுத்து விடுவேன்; சுகம் பெறல் வேண்டின் என்னை நன்கறிந்து ஒழுக வேண்டும்; நான் யார் எனின் நான்தான் சுத்த சிவசன்மார்க்க ஞானம் நிறைந்த பிள்ளை யாவேன் என அறிக. எ.று.
அடவாதம் - பிடிவாதம் என வழங்குவது. வேண்டாத கருத்துக்களை அடுக்கி மொழிந்து அவற்றின்கண் கேட்பவர் உள்ளம் செல்லுமாறு உந்துவது அகங்காரத்தின் செயலாகும். அது பற்றியே, “அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்து முடுக்கின்றாய்” என உரைக்கின்றார். முடுக்குதல் - உந்துதல். நாட்டவர் எல்லோரும் காணத் தலைநிமிர்ந்து திமிர்கொண்டு இயங்குவது பற்றி அகங்காரத்தை, “செகம் காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய்” என்று எச்சரிக்கின்றார். செபம் - கொள்கை. இகம் - இவ்வுலகம். சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்னும் வழக்குப் பற்றி, “எறிந்திடச் செய்திடுவேன்” என்று குறிக்கின்றார். பரசிவ பேற்றுக்குரிய ஞான மார்க்கத்தைச் “சுத்த சிவ சன்மார்க்கம்” என்றும், அதனால் தமக்கும் இறைவனுக்கும் உண்டாகிய தொடர்பை விளக்குதற்கு, “சுத்த சிவசன்மார்க்கம் பெற்ற பிள்ளை” என்றும் எடுத்துரைக்கின்றார். (8)
|