4842.

     மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
          வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
     ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
          ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
     கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
          கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
     ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
          இறைவன் அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.

உரை:

     மான் எனப்படும் பிரகிருதி மாயையாகிய உலகை மயக்கும் மாயா வித்தையைச் செய்ய வல்ல சிறுக்கிப் பெண்ணே; நான் சொல்லும் இதனைக் கோட்பாயாக; உன்னுடைய வஞ்சம் நிறைந்த கூத்து வகைகள் எல்லாவற்றையும் ஓர் மூட்டையாகக் கட்டிக் கொண்டு கண்டார் இகழும்படி உன் தலைமேல் வைத்துக்கொண்டு உன்னுடைய ஏவலைச் செய்கின்ற கூட்டத்தோடு இவ்விடத்தை விட்டு நீங்கிக் காட்டை அடைந்து உன் வஞ்சக் கருத்துக்களை வருத்திக் கொண்டு வாழ்ந்தொழிக; இல்லையானால் உன்னை உன் கூட்டத்தோடு ஒருகணப் பொழுதில் மாய்த்து விடுவேன்; என்னை இன்னாரென நீ அறியாய் போலும்; நான் யார் எனில் ஞான சபையில் நடம் புரிகின்ற அருட் பெருஞ் சோதியாகிய இறைவனுக்கு இனிய பிள்ளையாவேன் என அறிக. எ.று.

     மான் என்னும் தத்துவத்தை மூலப்பகுதியின் மிகுதியாம் என்று பரிமேலழகர் கூறுவர். சாலம் என்பது மாய வித்தை. சிறுக்கி - இளைய பெண். இதற்கு ஆண்பால் சிறுக்கன் என்பது. வஞ்சக் கூத்து - வஞ்சனை நிறைந்த செயல்கள். ஈனம் - இகழ்ச்சி. ஏவல் புரி பெண்கள் - பணிப் பெண்கள். மான் என்னும் தத்துவத்தைத் தலைமைப் பெண்ணாக உருவகஞ் செய்கின்றாராதலின், ஏவல் புரி பெண்களைப் பெய்துரைக்கின்றார். ஏன் எனை நீ அறியாய், என்ன காரணத்தால் என் இயல்பை இன்னும் அறியாதிருக்கின்றாய்.

     (9)