4843. மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
உரை: மாயை என்னும் சத்தியாகிய மிக்கு திருட்டுத் தன்மையுடைய சிறுக்கியே; நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; உன்னுடைய மாயச் செயல்களை எல்லாம் சுமைசுமையாக இறுகக் கட்டிக் கொண்டு உன்னுடைய சாயை என்று கூறப்படும் பெண் கூட்டத்தின் தலைமேலும் உனது தலைமேலும் சுமந்து கொண்டு பலர் செல்லாத ஒரு சந்து வழியை நோக்கிப் பேய்த் தன்மை எனப்படும் காட்டினுள் ஓடிப் பிழைத்துக் கொள்வாயாக; இல்லையாயின், பின்முன் பாராமல் நீ வாய் திறந்து ஒரு சொல் பேசுதற்கு முன்பே மாய்த் தொழிப்பேன்; என்னை நீ ஆய்ந்து நோக்கிற்றிலை போலும்; எல்லாம் செய்யவல்லவராகிய சிவபெருமானுடைய அருள் ஞான அமுதத்தை உண்டுத் திருவருள் பீடத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாவேன். எ.று.
மாயை என்பது பரிக்கிரக சத்தி என்னும் ஒரு தத்துவம். அது மயக்கம் செய்வதாகலின் பெண்ணாக உருவகப் படுத்தி, “படு திருட்டுச் சிறுக்கி” என்று ஏசுகின்றார். மாயையின் வடிவம் பெண் எனப்படுவதால், “உன் சாயை எனும் பெண் இனத்தார்” என்று கூறுகின்றார். சந்து - பலர் செல்ல முடியாத குறுகிய வழி. பேய் என்றது பேய்த் தன்மை. ஆய் எனை என்பதற்கு நுண்ணறிவினனாகிய என்னை என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். (10)
|