4844. மாமாயை எனும்பெரிய வஞ்சகநீ இதுகேள்
வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
உரை: சுத்த மாயை என்று சொல்லப்படுகின்ற வஞ்சகம் நிறைந்த பெண்ணே; நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; உனக்கென வரையறுக்கப்பட்ட பரிசனப் பெண்களில் வகை வகைகளாகவும் தொகையாகவும் சொல்லப்படுகின்றவர்களும் உடனே இவ்விடத்தினின்றும் நீங்கிப் போகுமாறு உன்னுடைய செயல்கள் அனைத்தையும் நிறைவு செய்துகொண்டு போன வழி தெரியாமல் போய்ப் பிழைத்துக் கொள்வாயாக; யான் சொல்லும் இதனை உண்மையுரையாக எண்ணிக் கொள்க; என்னை யார் என்று நீ தெரிந்து கொள்ளவில்லையானால் அறியுமாறு சொல்லுகின்றேன்; கேள்; ஞான சபையின் அருள் ஞான நடனம் புரிகின்ற சிவபெருமானுடைய திருவருள் ஞான அமுதத்தை உண்டு அந்த அருள்நிலையில் அமர்ந்திருக்கின்ற மகனாவேன் என அறிக. எ.று.
மாமாயையைச் “சுத்த மாயை” என்றும், அசுத்த மாயையைப் “பெருமாயை” என்றும் கூறுவர். அசுத்த மாயையின்கண் அகங்காரம் முதலிய ஆன்ம தத்துவ மாயைகள் பலவும் அடங்குதலின் அதனைப் “பெருமாயை” என்று கூறுகின்றனர். ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என வகுத்து, ஐந்தும் நான்கும் எட்டும் பதின்மூன்றும் என விரித்துரைப்பராதலின், “வகை தொகைகள் உடனே போமாறு” எனப் புகல்கின்றார். பரிசனப் பெண்களை “மாயா சத்திகள்” என்பர். சத்திகளைக் கொண்டு செய்கின்ற செயல்கள் பலவற்றையும் குறைவற அடக்கிக்கொண்டு போன வழி தெரியாமல் போக வேண்டும் என்றற்காக, “பூரணமாக் கொண்டு போன வழி தெரியாதே போய் பிழை” என்றும், இல்லையாயின் நீ பூன்டெனக் கெடுமாறு கொன்று விடுவேன் என்று சொல்லுவாராய், “இலையேல் சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன்” என்றும் கூறுகின்றார். வெறும் அச்சுறுத்தலாகக் கொள்ளலாகாது என்பாராய், “இதுதான் சத்தியம் என்று எண்ணுதி” என (11)
|