4845. கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
உரை: கன்மம் என்று சொல்லப்படுகின்ற மலமாகிய அச்சுறுத்தும் மிகுந்த கலகத்தை விளைவிக்கின்ற அற்பப் பயலே; தடுக்கும் கரையில்லாத கடல் போல் வினைகளை நன்மை தீமை யெனப் பலவகையாகக் காட்டி என்னை இயக்கிவந்தாய்; இனி உன்னுடைய இயக்கம் யாவும் சிறிதும் என்னிடம் செல்லாது; ஆதலால் நீ உடனே விரைந்து என்னை விட்டு நீங்கி ஒழிக; நீங்காமல் என்முன் இருப்பாயாகில் நீ அழிந்தொழிவது உறுதி; ஆதலால் இந்தக் கணத்திலேயே உன் இனத்தாரோடு திரளாகக் கூடிக்கொண்டு போய்விடுக; போகவில்லையாயின் வினையே என்பால் இல்லை என்னுமாறு மாய்த்துவிடுவேன்; நீ இன்னும் என்னை அறிந்திலை போலும்; எல்லாம் செய்ய வல்லவனாகிய சிவனுக்கு நான் இனிய பிள்ளையாவேன். எ.று.
சிலுகுதல் - அச்சுறுத்தல்; சுருங்குதலுமாம். இது சிலுக்குதல், சிலுசிலுக்குதல் என்றெல்லாம் வழங்கும். கடுங்காலம் - மிகுந்த கலகம். கடுமை - மிகுதிப் பொருளதாகிய கடி என்னும் உரிச்சொல் அடியாகப் பிறப்பது என அறிக. கங்கு - கரை. தடுக்கும் கரை - வினைகள். பாசவினை. பசுவினை, பதிவினை எனப் பலதிறப்படுதலின், “நின் இனத்தோடே ஏகுக” என இயம்புகின்றார். (12)
|