4846.

     எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
          இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
     இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
          இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
     பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
          பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
     சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
          சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.

உரை:

     எள்ளளவும் தன் உருவத்தைக் காட்டாத ஆணவம் என்று சொல்லப்படுகின்ற இருட்டறையில் கிடந்து அதிகாரம் பண்ணுகின்ற குருட்டுத் தன்மையுடன் முடமாய் இருக்கின்ற அற்பப் பயலே; உன்னைக் கண்டுபிடித்து வெளியில் வெளிப்படுத்தற்கு இத்தனை நாளாயிற்று; இனி அரைக்கண நேரமும் என்னிடம் உன்னை இருக்கவிட மாட்டேன்; இந்தக் கணமே நின்னுடைய இணைந்த சுற்றத்துடன் போய் விடுவாயாக; போகவில்லையாயின் நிறைந்த மெய்ஞ்ஞான ஒளியால் உன்னைக் கொன்றுவிடுவேன்; இது சத்திய உரை அறியாய் போலும்; நான் ஞான சபைத் தலைவனாகிய சிவனருள் பெற்ற தலைமையும் தனித் தன்மையுமுடைய மகனாவேன் என அறிக. எ.று.

     “ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும் இருபொருளும் காட்டாது காட்டாது இது” (திருவருள். 23) என்று பெரியோர் கூறுதலால், “எத்துணையும் காட்டாத ஆணவம்” எனப்படுகின்றது. ஆணவத்தால் கட்டுண்டு நிற்கும் ஆன்மாவில் கேவல நிலையை, “காரிட்ட ஆணவக் கருவறை” என்று தாயுமானவர் முதலிய பெரியோர் கூறுவதால், “இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டு முடப் பயலே” என்று கூறுகின்றார். கேவலத்தில் அறிவு செயல்கள் இல்லாமையின் ஆணவத்தைக் “குருட்டு முடப் பயலே” எனக் குறிக்கின்றார். இருளினும் வன்மையுடைமை விளங்க ஆணவ விருளைக் கண்டறிய இத்தனை நாள் பிடித்தது என்பாராய், “இத்தனை நாள் பிடித்தது உனைக் கண்டு துரத்திட” என்று கூறுகின்றார். குற்றங்கள் நிறைந்ததாதலின் அவற்றைப் “பொற்றிய சுற்றம்” என்று புகல்கின்றார். ஒளியின் முன் இருள் நில்லாதவாறு போல ஞான ஒளியின் முன் ஆணவ இருள் இல்லாது ஒழியும் என்பது விளங்க, “பூரண மெய்யருள் ஒளியால் நினைப் பொன்றுவிப்பேன்” என்று உரைக்கின்றார். தான் ஞான ஒளி உடைமை விளங்க, “ஞானசபைத் தலைவன் தருதலைமைத் தனிப் பிள்ளை” என்று தம்மை வடலூர் வள்ளல் இனிது வெளிப்படுத்துகின்றார்.

     (13)