4847.

     பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
          பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
     ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
          உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
     அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
          அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
     தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
          சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.

உரை:

     பிரகிருதி மாயை என்று சொல்லப்படுகின்ற மாயையாகிய ஒரு பெண்ணாகிய நீ கேள்; உனது மாயைக் காரியமாய் என்னிடத்தில் உள்ள உடம்பாகிய இதனைச் சாகாத சுத்த உடம்பாக்கித் திருவருள் ஞானத் திருவமுதை உண்டு நான் உயர்ந்திருக்கின்றேன்; ஆகவே இனி உன்னுடைய உதவியை அணுவளவும் உள்ளத்தால் விரும்பமாட்டேன்; திருவருட் சோதியாகிய சிவஞானம் எனக்கு வேண்டும் உதவியைச் செய்கின்றது; நீ அதனை அறியாய் போலும்; என்னளவில் நீ உதவி செய்வதை நிறுத்துக; நிறுத்திப் புறத்தே சென்று ஒழிக; தெளிவுடைய ஞானிகள் சுழலில் என்னுடைய வரலாற்றை நீ அறிந்திலை போலும்; ஞானசபைத் தலைவனாகிய கூத்தப் பெருமானுக்கு நான் ஒரு சிறந்த பிள்ளை என்று அறிவாயாக. எ.று.

     ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கும் தோன்றுமிடமாதலின் பிரகிருதி மாயை, “பெருமாயை” எனப்படுகிறது. தத்துவங்களாலாகிய உடம்பு இறக்கும் இயல்புடைமையாதலால், “சாகாச் சுத்த உடம்பாக்கி” என்றும், அது ஆக்கமடைதல் பொருட்டுத் திருவருள் ஞான அமுதத்தை உண்டமை புலப்படுப்பார், “ஒரு ஞானத் திருவமுது உண்டு ஓங்குகின்றேன்” என உரைக்கின்றார். நிலையில்லாத மாயாக் காரியத்தை விரும்பாமை விளங்க, “நின் உபகரிப்பு ஓர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்” என்று உரைக்கின்றார். திருவருள் ஞானத்தின் பேரொளி எல்லாத் துணையும் புரிகின்றது என்றற்கு, “அருளாள சோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ” எனத் தெரிவிக்கின்றார். ஞானத் தெளிவுடைய பெரியோர்களுக்கு மாயாச் சம்பந்தம் பயன் தராது என்பது நன்கறிந்த உண்மையாதலால், “தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ” என்று செப்புகின்றார்.

     (14)