4848.

     பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
          பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
     வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
          வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
     ஏசுறுநின் செயல்அனைத்தும் என்அளவில் நடவா
          திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
     மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
          வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.

உரை:

     திரோதாயி என்று பேசப்படுகின்ற பெண் மகளே; நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; என்னுடைய பிற்பாடு முற்பாடுகளை ஆராய்ந்தறியாமல் என்முன் தோன்றி மறைப்பதைச் செய்யாதே; துன்பம் வரும்படியாக இயற்கை மலமாகிய ஆணவம் செய்யும் இருள் முழுதும் ஒழிந்தது; அன்றியும் ஒளி திகழும் அருட்பெருஞ் சோதி எங்கும் விளங்குகின்றது; இதனை நன்கு அறிந்து கொள்க; இகழப்படுகின்ற நின் செயல்கள் யாவும் என்னிடத்தில் செல்லா; இந்த எனது நிலையை அறிந்து என்னை விட்டு விரைந்து நீங்குக; குற்றமில்லாத என்னுடைய வரலாறு முழுதும் நீ அறியாய் போலும்; எல்லாம் வல்ல சித்தராகிய சிவபெருமானுக்கு நான் ஒரு நல்ல பிள்ளை என்று அறிவாயாக. எ.று.

     உயிரறிவை மறைக்கும் திரோதான சத்தியைத் “திரோதாயி” என்று கூறுகின்றார். மறைத்தல் இறைவன் அருட் செயல்களில் ஒன்றாதலின் திரோதானத்தைத் “திரோதாயி” என்று எடுத்து மொழிகின்றார். அனுபவ ஞானம் உயிர்க்கு எய்துவது குறித்து மறைத்தலும் தெளிவித்தலும் திரோதான சத்தியின் அருட் செயலாதலின் அதனை விளக்குதற்கு, “பின்முன் அறியாது எனை மறைக்காதே” என்று அறிவுறுத்துகின்றார். திருவைந்தெழுத்தினுள்ளும் திரோதானத்தைச் செய்யும் திருவெழுத்து உண்டென அறிக. மலநீக்கத்தின் பொருட்டுத் திரோதான சத்தி தொழில் புரிவது ஆகமங்களின் முடிபாதலின், “வேசற மாமல இரவு முழுதும் விடிந்தது” என்றும், “அருட்பெருஞ் சோதி விளங்குகின்றது அறிதி” என்றும் இயம்புகின்றார். சிவபோகப் பேறு பெறச் சமைந்தார்க்குத் திரோதானம் வேண்டாமையின், “ஏசுறு நின் செயலனைத்தும் என்னளவில் நடவாது இதையறிந்து விரைந்து எனை விட்டு ஏகுக” என்று இயம்புகின்றார்.

     (15)