4849. தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
தாக்கு பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
ஏக்கம்எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம்எலாம் பெற்றேன்
இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
உரை: தூக்கம் என்று சொல்லப்படுகின்ற கீழ்ப்பட்ட குணஞ் செயல்களையுடைய சோம்பேறிப் பயலே; நான் சொல்லுகின்ற இதனைக் கேட்பாயாக; மனத்துணிவுடன் சுற்றத்தாரோடு சேர்ந்துகொண்டு நான் சொல்லுகின்ற அரைக்கணத்தில் கொடிய விலங்குகள் தாக்குகின்ற பெரிய காட்டுக்குள் நீ போய் ஒழிவாயாக; போகாதிங்கே இருந்தால் தப்புதலின்றி உன் தலைக்கே கேடு வரும்; நான் சொல்வது சத்தியம். என்னைப் பற்றி இருந்த ஏக்கங்கள் எல்லாவற்றையும் போக்கிக் கொண்டேன்; ஆவதற்குரிய நலன்கள் எல்லாம் பெற்றுக் கொண்டேன்; அதனால் இன்ப முறுகின்றேன்; இனி நீ என்பால் வந்து சேராதே; சேராமல் உன் போக்கில் நீ விரைந்து போய் ஒழிவாயாக; பொற்சபையிலுள்ள சிற்சபையில் எழுந்தருளி இருக்கின்ற நிறை பொருளாகிய பரம் இவ்விடத்து அன்பாகப் பொருளுடையவனாக இருக்கின்றான் என அறிந்து கொள்க. எ.று.
அன்பே பொருளாகப் பரிபூரணனாகிய கூத்தப் பெருமான் எனக்குப் பொருளாக இருக்கின்றானாதலால் நீ உன் போக்கில் போய் ஒழிக என்பது கருத்து. நெடுநீர் மறதி படி துயில் என்பவை தூக்கத்தைச் சார்ந்து வருபவையாதலால் அவற்றைத் தூக்கத்திற்குச் சுற்றம் எனச் சொல்கின்றார். ஞானப் பேற்றுக்குத் தடையாதலின் “ஏக்கமெலாம் தவிர்த்து விட்டேன்” என்று இயம்புகின்றார். (16)
|