4850. பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
உரை: அச்சமென்று சொல்லுகின்ற கொடிய பாவத்தன்மையுடைய அற்பனே; நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக; இப்பொழுதே என்னுடைய பற்றறத் துடைத்துக் கொண்டு குளிர்ந்த கடலில் மூழ்கி ஒழிவாயாக; நான் இதனை அருளோடு உனக்கு உரைக்கின்றேன்; என்பால் இருப்பாயாயின் உன் தலைக்கு தீங்குண்டாகும்; தலைக்கேயன்றிச் செயல்படுகின்ற உனது சூக்கும உடம்பும் கெட்டொழியும்; உன்னைச் சூழ விருக்கும் தீக்குணங்களாகிய சுற்றமும் இறந்துபடும்; இனிப் பயம் என்பதே ஒழிந்தது என்ற வார்த்தை உலகில் பரவி விடும்; வேறு இடமறிந்து அது நோக்கிச் சென்று ஒழிக; நீ என்னை அறியாய் போலும்; நான் அம்பலவாணனாகிய தந்தையின் அருளையே விரும்புகின்ற பிள்ளையாவேன் என அறிவாயாக. எ.று.
இருந்த இடம் தெரியாதபடி மறைந்து ஒழிக என்பாராய், “பற்றற என்றனை விடுத்துப் பனிக்கடலில் வீழ்ந்து ஒளிப்பாய்” என்று பகர்கின்றார். பயன் என்ற பண்பை அதனையுடைய அற்பச் சிறுவனாக உருவகம் செய்கின்றாராதலால், “இன்னும் இருத்தி எனில் உனது தலைக்குத் தீங்கு வரும்” என்றும், உன்னுடைய சூக்கும உடம்பும் கெட்டொழியும் என்றற்கு, “உன் உடம்பு அழியும்” என்றும் உரைக்கின்றார். அச்சமே கீழ்மக்கட்கு உறைவிடமாதலால் நீ அவர்பாலே சென்றடைக என்று அறிவித்தற்கு, “அயலிடை நேர்ந்து ஓடுக நீ” என அறிவிக்கின்றார். அருள் நம்பு பிள்ளை - திருவருளையே நம்பி வாழ்கின்ற மகன் என்பது கருத்து. (17)
|