4851.

     கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
          கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
     தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
          தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
     தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
          சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
     சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
          தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.

உரை:

     கோபம் என்றும் காமம் என்றும் மோகம் என்றும் உலோபம் என்றும் மாற்சரியம் என்றும் சொல்லப்படுகின்ற குற்றவாளிகளாகிய கீழ்மக்களே; உங்களிடம் தயவு புரிந்து சொல்லுகின்றேன்; காலம் தாமதிக்காமல் ஒளி என்பதே இல்லாமல் இருளே நிறைந்த இடம் நோக்கிச் சென்று அடைவீர்களாக; சிறிது பொழுதேனும் இங்கே இருப்பீர்களானால் நிச்சயமாக அழிந்துபடுவீர்கள்; நான் வெகுண்டுச் சாபம்கொடுக்கும் முன் என் குறிப்பறிந்து ஓடி ஒளிப்பீர்களாக; என்னை இன்னார் என அறிய மாட்டீர்கள்; ஒப்பற்ற தலைவனாகிய சிவனுக்குத் தலையாய மகன் நான் அறிவீர்களாக. எ.று

     கோபத்தால் கொலைச் செயலும் காமத்தால் பிறரை ஈர்த்து அடக்குதலும் நிகழ்தலால் கோபத்தை, “புலைப் பயல்” என்றும், காமத்தை, “வலைப் பயல்” என்றும் குறிக்கின்றார். வலைப் பயல் - வலைகளைப் பரப்பிப் பிற உயிர்களைப் பிடித்து வருத்துபவர். மோகம் - மயக்கம். கொடிய செயல்களுக்கு அது காரணமாதலால், “கொடு மோகக் கடைப் பயலே” என்றும்; சிறு குறும்புகளை விளைவித்துத் துன்புறுத்துவதுபற்றிச் செருக்கினை, “குறும்பு மதப் பயலே” என்று கூறுகின்றார். மதம், செருக்கு, தாபம், ஆத்திரம், உலோபம் இவை அன்பை ஈயாத் தன்மை எனினும் அமையும். மாற்சரியம் - பகைமை. ஒளியே இல்லாத இருள் நிறைந்த நரகம் என்றற்கு, “தீபமெலாம் கடந்த இருள்சேர் நிலம்” என்று இசைக்கின்றார். சாபம் - கெடுமொழி. வெகுளி காரணமாகப் பிறப்பது பற்றிச் “சாபம்” எனப்படுகிறது. தலைமைக் குணங்களால் நிறைந்த மகன் என்றற்கு, “தலைப்பிள்ளை நானே” என்று சாற்றுகின்றார்.

     (18)