4852.

     பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
          படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
     வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
          வன்பயலே நீவிர்எலாம் என்புடைநில் லாதீர்
     நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவிர்
          நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
     கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
          கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.

உரை:

     பசியென்று சொல்லப்படுகின்ற பெரிய பாவியாகிய அற்பப் பயலே; துன்பம் எனப்படும் ஒரு படுபாவிப் பயலே; ஆபத்தென்று சொல்லப்படுகின்ற பொய்த்தன்மையுடைய பயலே; மனதை வருத்துகின்ற மனநிலை எனப்படும் கீழ்மைத் தன்மையுடைய பயலே; தடை செய்யும் பயலே; நீங்கள் யாவரும் என் பக்கத்திலும் வந்து நிற்க வேண்டாம்; கெடுவது உமக்குக் கருத்தாகுமோ; அதுவாயின் இப்பொழுதே என்னை விட்டு நீங்கி இந்தக் கணமே விரைந்து நடந்து நாடு கண்டறியாத காட்டிற்கு ஓடிவிடுங்கள்; இளகுகின்ற மனத்தை யுடைய என்னை நீவிர் இன்னார் என்று அறியமாட்டீர் போலும்; ஞான சபையில் விளங்குகின்ற கடவுளாகிய சிவபெருமான் பெற்ற ஞான ஒளியுடைய பிள்ளை என எனை அறிவீர்களாக. எ.று.

     பெரும்பாவி - பெரிய பாவத்தைச் செய்பவன். படுபாவி - கொடிய துன்பத்தைச் செய்பவன். எதிர்பார்த்தவண்ணம் வருவதும் வாராதொழிவதும் ஆபத்துக்கு இயல்பாகலின், “ஆபத்தெனும் பொய்ப் பயலே” என்று சொல்லுகின்றார். அவத்தை - மனநிலை. தடை செய்யும் தீங்கினைத் “தடைப் பயலே” என்று உருவகம் செய்கின்றார். இடர் - துன்பம்; நோயுமாம். நசிதல் - இறத்தல். எந்த நாட்டிலும் இருக்க முடியாத காட்டை, “நாடறியா வனம்” என்று நவில்கின்றார். ஞான ஒளியுடைய மகன் என்றற்கு, “கதிர்பிள்ளை” என்று கூறுகின்றார்.

     (19)