4853. மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
பரணம்உறு பேர்இருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
அரண்உறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
உரை: சாக்காடு என்று சொல்லப்படும் பெரிய திருட்டுத் தன்மையும் மாபாவியுமான அற்பப் பயலே; மண்ணுலகமும் வானுலகமும் மற்ற உலகங்களும் எல்லாவற்றையும் கடந்து அவற்றிற்கு அப்பால் உள்ள மிக்க இருள் நிறைந்த பெருநிலத்தையும் கடந்து ஒரு சிறு பற்றுமின்றி ஒழிந்து மறைந்தொழிக; இனியும் இங்கு இருந்தாயானால் புண்ணுறும்படியாக உன்னை வெட்டி வீழ்த்திடுவேன்; நான் சொல்லும் இதனை என்னை உடையவனாகிய இறைவன் திருவருள் மேல் ஆணை; என்னுடைய ஞான குருவின் மேல் ஆணை; திருவருள் ஞானத்தைக் காப்பாக உடைய என்னை விட்டுவிட்டு நீங்கி ஒழிக; நான் யாரெனில் அருட் சோதி ஆண்டவனாகிய சிவபதியை அடைந்துள்ள அவருக்கு மகனாவேன். எ.று.
மரணம் - சாக்காடு. எந்த நேரத்தில் எப்படி எய்தும் என்பது தெரியாமல் வருவதால், “மரணமெனும் பெருந் திருட்டுப் பயலே” என்று கூறுகின்றார். பரணம் - தங்குமிடம். பசை -பற்று. புண்ணுண்டாக வெட்டிக் கொன்றுவிடுவேன் என அச்சுறுத்துவாராய், “இரணமுற உன்னை முழுதும் மடித்திடுவேன்” என்று கூறுகின்றார். அரண் - திருவருளால் உளதாகும் (20)
|