103. பேறடைவு
அஃதாவது, சிவப்பேறு அடைவதற்குரிய செவ்வி எய்தினமை புலப்படுத்துவதாம். இங்கு வரும் பாட்டுக்களால் வள்ளற் பெருமானுடைய உள்ளந்தக் கரணங்கள் பதிகரணங்களாக மாறும் திறம் தலைப்படுவது காணலாம். சிவஞானிகள் தாம் எய்தும் ஞானப் பேற்றால் தமது பசு கரணங்கள் பதிகரணங்களாக மாறித் தம்முடைய நினைவு, சொல், செயல்கள் ஆக மூன்றும் முறையே பதிநினைவும், பதிமொழியும், பதிசெயலுமாகத் திரிகுவர் என்பது ஞான சாஸ்திரங்களின் துணிபுரை என அறிக.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4854. மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
வரையுள தாதலால் மகனே
எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
தெழில்உறு மங்கலம் புனைந்தே
குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
கோலத்தால் காட்டுக எனவே
வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
உரை: அருள் மணம் புரிந்துகொள்ளும் நேரம் இன்னும் இரண்டரை நாழிகை இருப்பதால் மகனே நீ வேறு எண்ணங்களைக் கொண்டு வருந்தாமல், முடி சிரைத்தல் முதலிய சம்ஸ்காரங்களைச் செய்துகொண்டு அழகிய மங்கலக் கோலம் புனைந்து நற்பண்புடையவனாய் எம்முடைய மகன் என்னும் குறிப்பை உன்னுடைய வேடத்தால் காட்டுக என்று அழகு பொருந்திய மணிகள் இழைத்த பெரிய சபையில் எழுந்தருளுகின்ற என் தந்தையாகிய சிவபெருமான் மனமகிழ்ச்சியுடன் எனக்கு உரைத்தருளினார். எ.று.
திருவருள் சிவஞானப் பேற்றையும் திருமணமாக உரைக்கும் மரபு பற்றி, “மணம் புரி கடிகை” என்று கூறுகின்றார். திருத்தக்க தேவரும் சீவகன் கேவல ஞானம் பெற்ற திறத்தை, “கேவல ஞானமென்னும் கேழ்கிளர் நெடிய வாட்கண் பூவலர் கண்ணியாளை மணந்து கொண்டான்” எனக் கூறுவது காண்க. ஞானப் பேற்றின்கண் கருத்தைச் செலுத்தாமல் உலகியல் இன்பத் துறைகளில் கருத்துப் போதல் கூடாது என்றற்கு, “எணம் புரிந்து உழலேல்” என இயம்புகின்றார். ஞான தீட்சை பெறுபவர் முடி சிரைத்தல், நகம் களைதல், நீராடித் தூய ஆடையணிதல் முதலிய சடங்குகளைச் செய்வது இயல்பாதல் பற்றி, “சவுளமாதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்து” என்று எடுத்துக் கூறுகின்றார். குணம் புரிவதாவது ஞானப் பேற்றுக்குரிய மந்திரங்களை ஓதுவதாகும். உடையும் குறிகளும் அடையாளங்களும் புனைவது ஞான தீட்சைக்கு அறிகுறியாதலால், “எமது மகனெனும் குறிப்பைக் கோலத்தால் காட்டுக” என்று கூறுகின்றார். சிவஞானிகட்குரிய உடையும் கோலமும் கொள்ளுக என்பது கருத்து. திருநீறு அணிதலும் அக்குமணி மாலை அமைவதும் தூய வெள்ளாடை உடுப்பதும் கோலங்களாம். (1)
|