4856. அன்புடை மகனே மெய்யருள் திருவை
அண்டர்கள் வியப்புற நினக்கே
இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
இரண்டரைக் கடிகையில் விரைந்தே
துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
தூய்மைசேர் நன்மணக் கோலம்
பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
பொதுநடம் புரிகின்றார் தாமே.
உரை: எனது அன்பையுடைய மகனே! மெய்ம்மைத் திருவருள் ஞானமாகிய திருமடந்தையைத் தேவர்கள் எல்லோரும் கண்டு வியப்பு மிக உனக்கே இன்பம் நிறைந்த உரிமைத் திருமணத்தை இரண்டொரு நாழிகையில் செய்து வைப்போம்; ஆதலால் துன்பம் தரும் நினைவுகள் செயல்கள் அத்தனையும் போக்கித் தூய்மை சேர்ந்த நல்ல மனக் கோலத்தைப் பொன்னணிகள் விளங்கப் புனைந்து கொள்க என்று அம்பலத்தில் திருநடம் புரிகின்ற சிவபெருமான் உரைத்தருளினார் எ.று.
சிவஞானமே பொருளாகக் கொண்டது சிவம் புரியும் மெய்யன்பாதலால், “அன்புடை மகனே” என்று மொழிகின்றார். திருவருள் ஞானத்தைச் செல்வ மடந்தையாக உருவகம் செய்கின்றாராதலால், “மெய்யருள் திருவை” என விளம்புகின்றார். தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய பேறாதலின், “அண்டர்கள் வியப்புற” என இயம்புகின்றார். சிவத்தினது மெய்யன்புடையவர்கள் சிவபோகத்திற்கு உரியவராதலின் அவர்களது ஞான மணம், “இன்புடைய உரிமை மணம்” எனப்படுகின்றது. துன்பத்தை விளைவிக்கும் நினைவு சொல் செயல்களாகிய மூன்றும் ஞானானந்தத்திற்கு இடையூறாவனவாதல் பற்றி, “துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்து” என்றும், சிவபோகத்தின் சிறப்பு விளங்க, “தூய்மைசேர் நன்மணக் கோலம்” என்றும் இயம்புகின்றார். பொன் என்றது ஈண்டுப் பொன்னாலாகிய ஆபரணங்கள். (3)
|