4860.

     கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக்
          களிப்பொடு மணம்புரி விப்பாம்
     விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல்
          விரைந்துநன் மங்கலக் கோலம்
     நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர்
          நவிலும்அவ் வுலகவர் பிறரும்
     இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார்
          இயலுறு சிற்சபை யவரே.

உரை:

     மகனே! மனநிலை குழம்புதல் வேண்டா; திருவருள் ஞானமாகிய நன்மங்கையை மனமகிழ்ச்சியோடு மணம் புரிவிக்கப் போகின்றோம்; அதனால் நீ ஞான நெறியினின்றும் விலகுதல் வேண்டா; இனிக் காலத்தை வீண் போக்காமல் திருமணத்திற்குரிய கோலத்தை விரைந்து மேற்கொண்டு ஆடை அணிகளைப் புனைந்து கொண்டு மகிழ்வாயாக; பின்பு இவ்வுலகத்தவரும் நூல்களால் ஓதப்படும்; மேலுலகத் தேவர்கள் மற்றவர்களும் உனது ஞானத் திருமணமே பெரிதெனப் புகழ்ந்து பாராட்டுவர் என்று ஞானம் விளங்குகின்ற சிற்சபையையுடைய தலைவராகிய சிவபெருமான் அறிவித்தருளினார். எ.று.

     ஞானத்தோடு கூடுதல் இல்லையே என்று அதனையே நினைந்து வருந்தினமை தோன்ற, “கலங்கிடேல் மகனே” என்றும், திருவருள் ஞானம் எய்திய வழி உனக்கு எல்லா நலன்களும் வந்து நிறையும் என்பாராய், “அருளொளித் திருவைக் களிப்பொடு மணம் புரிவிப்பாம்” என்றும், தாம் எண்ணியவாறு ஞானப் பேறு கிடைக்கவில்லையே என்று அறிவு திரிந்து நெறி மயங்கி மனம் வருந்த வேண்டாம் என்றற்கு, “விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நன்மங்கலக் கோலம் புனைந்து மகிழ்க” என்றும் கூறுகின்றார். நலங்கொளப் புனைதலாவது அழகு மிக ஒப்பனை செய்து கொள்ளுதல். உன் மனக் கோலத்தையும் மனநிகழ்ச்சியையும் கண்டு விண்ணும் மண்ணும் பிறவுமாகிய உலகங்களில் வாழ்பவர் யாவரும் நின் திருமணத்தையே வியந்து பாராட்டுவர் என்பர், “இவ்வுலகவர் நவிலும் அவ்வுலகவர் பிறரும் நின் மணமே இலங்க ஏத்துவர் என்றார்” என்று கூறுகின்றார். சிற்சபை யவர் - ஞான சபைத் தலைவராகிய சிவபெருமான்.

     (7)