4861.

     ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே
          அருள்ஒளித் திருவைநின் தனக்கே
     மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்
          விரைந்திரண் டரைக்கடி கையிலே
     கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும்
          களிப்பொடு மங்கலக் கோலம்
     வையமும் வானும் புகழ்ந்திடப் புணைக
          என்றனர் மன்றிறை யவரே.

உரை:

     நமக்கு மகனே; இது நமதாணை; இனிச் சிறிதும் சந்தேகம் வேண்டாம்; திருவருள் ஞானமாகிய செல்வ மகளை உண்மை மகிழ்ச்சியோடு உனக்கே மணம் செய்யப்போகின்றோம்; நீயும் விரைவுடன் இரண்டரை நாழிகையில் வருத்தமனைத்தும் போக்கி மிக்க மகிழ்ச்சியுடன் ஞான மணத்திற்குரிய ஒப்பனையை மண்ணவரும் தேவர்களும் கண்டு புகழுமாறு செய்துகொள்க என்று அம்பலவாணராகிய இறைவர் அறிவித்தருளினார். எ.று.

     ஞானப் பேறு எய்துமோ எய்தாதோ என எண்ணி அலமந்தமை புலப்பட, “ஐயுறேல் மகனே” என்றும், தமது திருமொழியை வற்புறுத்தற்கு, “இது நம் ஆணை” என்றும் எடுத்து மொழிகின்றார். மேலும் வள்ளற் பெருமானுடைய மனம் தெளிவுறும் பொருட்டு, “அருளொளித் திருவை நின்றனக்கே மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம்” என்று விளம்புகின்றார். ஞானப்பேறு குறித்து வள்ளலார் வருந்தினமை விளங்க, “கையறவனைத்தும் தவிர்த்து மங்கலக் கோலம் புனைக” என்று கூறுகின்றார். ஐயுறும் உள்ளத்தோடு மங்கலக் கோலம் புனைதல் கூடாது என்பாராய், “மிகவும் களிப்பொடு மங்கலக் கோலம் புனைக” என்று புகல்கின்றார். கோலம் இவ்வாறு அமைதல் வேண்டுமென விளக்குதற்கு, “வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக என்றார்” என ஓதுகின்றார்.

     (8)