4867.

    கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
    புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
    தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
    அடையேன் உலகை உனைஅடைந்தேன் அடியேன் உன்றன் அடைக்கலமே

உரை:

     கடையவனாகிய என்னுடைய மனக்கவலைகள் எல்லாவற்றையும் போக்கித் திருவருளாகிய அமுதத்தை நல்கி என்னுடைய அகத்திலும் புறத்திலும் அகப்புறத்திலும் பக்கத்திலும் மின்னி விளங்குகின்ற புண்ணியப் பொருளாகிய சிவனே! இடையூறுகளைப் போக்குகின்ற பொற்சபைக்குத் தலைவனே! ஞான சபையின் பதிப் பொருளே! உலகியல் வாழ்வை அடைய விரும்பாமல் உன்னுடைய திருவடியையே புகலாக அடைந்தேன்; ஆதலால் அடியவனாக என்னை உனக்கு அடைக்கலப் பொருளாக ஏற்றருளுக. எ.று.

     கீழ்மைப் பண்பும் செயல்களும் உடமையால் கீழ்ப்பட்டவன் என்று தம்மைக் குறிக்கின்றாராதலால், “கடையேன்” என வடலூர் வள்ளல் தம்மைக் குறித்துரைக்கின்றார். மனத்தில் நிலவும் கவலைகளை உள்ளக் கவலை எனவும், அவை பொன் விலங்கும் இரும்பு விலங்கும் போல மனத்தைச் சூழ்ந்து இருப்பதால் அவற்றைப் போக்குதல் வேண்டும் என்பார், “கவலை எலாம் கழற்றி” எனவும் கூறுகின்றார். கவலையைப் போக்குவதோடு நில்லாமல் அருள் ஞானம் தந்து மேலும் கவலைகள் வந்து அடறாதபடிப் பாதுகாத்தற் பொருட்டு, “கருணை அமுதளித்து என்புடையும் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் விளங்கும் புண்ணியனே” என்று போற்றுகின்றார். வாழ்க்கையில் உளவாகும் ஞானத் திரோதகங்களாகிய தடைகளைப் போக்குவது பொற் சபையின்கண் விளங்கும் ஞான சபையாதலின் அதனை விளக்குதற்கு, “தடையே தவிர்க்கும் கனக சபைத் தலைவா” என்றும், “ஞான சபாபதியே” என்றும் உரைக்கின்றார். கனகசபைக்குள் இருப்பது ஞான சபையாதலின், “கனகசபைத் தலைவா ஞான சபாபதியே” என்று துதிக்கின்றார். உலகியலில் பிறந்து வாழ்கின்றாராயினும் தாம் உலகை விரும்பாது சிவனது திருவடி நீழல் வாழ்வையே அடைக்கலமாகப் புகுந்தமை விளங்க, “அடையேன் உலகை உனை அடைந்தேன்” என்றும், “அடியேன் உன் அடைக்கலமே” என்றும் முறையிடுகின்றார்.

     (4)