4868.

    இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
    முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
    சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
   அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

உரை:

     இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் பெறக்கூடிய பயன்கள் எல்லாவற்றையும் அடியவனாகிய யான் பெற வளித்து இப்பிறப்பிலே என்னுடைய முகத்திலும், மனத்திலும் உவகை பொங்கக் குன்றாத இன்ப நிலையில் என்னை இருக்க வைத்து உலகிலுள்ள பலரும் மிகவும் போற்றுமாறு தக்கோன் என்னைப் பாராட்டப்பண்ணி என்னுடைய அகத்திலும் புறத்திலும் இருந்தருளுகின்றாய்; ஆதலால் என்னை உன்பால் அடைக்கலமாக வைத்துள்ளேன். எ.று.

     இகபரம் - இவ்வுலகும் மேலுலகுமாகிய உலகங்கள். இரண்டிடத்தும் பெறுதற்குரிய நற்பயன்கள் எல்லாம் பெற்றுள்ளேன்; அவையாவும் இப்பிறவியிலே யான் பெற அருளி அதனால் என் மனமும் முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்தொளிரச் செய்தருளினாய் என்பாராய், “இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே முகத்தும் உளத்தும் களி துளும்ப” என்று மொழிகின்றார். பெறுவன முற்றவும் பெற்று மனமும் முகமும் மகிழ்ச்சி நிறைந்து திகழத் தாம் பெற்றிருக்கும் இன்ப நிலை தேய்ந்து கெடாத சிறப்பு நிலையாதல் பெறப்பட, மூவா இன்ப நிலை அமர்த்தி” என்றும், தமது நிலையைக் காணும் உலகத்தவர்கள் வியந்து பாராட்டுவது தோன்ற, “சகத்து உள்ளவர்கள் மிகத் துதிப்ப” என்றும், தமது வள்ளற் பெருமானுடைய தகைமை அறிந்து தக்கோன் எனப் புகழ்கின்றனர் என்றற்கு, “தக்கோன் என வைத்து” என்றும், தமது நிலையை உயர்த்தி அருளிய சிவ பரம்பொருள் தம்முடைய அகத்திலும் புறத்திலும் இருந்து அருளாதரவு செய்கின்றமை புலப்பட, “என்னுடைய அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய்” என்றும் விளம்புகின்றார். இப்பெருமை சான்ற அருள் நிலை தம்பால் நிலைபெறுதற் பொருட்டுப் பாதுகாப்பு நாடுகின்றாராதலின், “அடியேன் உன்றன் அடைக்கமே” என்று விளம்புகின்றார்.

     (5)