4871. கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
உரை: கட்டுக் கடங்காத மனமாகிய குதிரையைக் கட்டுதற்குரிய அறிவின்கண் அடக்குவித்து என் ஆற்றலுக்கு அடங்காத ஆங்காரம் மதம் ஆகிய குதிரைகள் என் வழி அடங்கி நிற்குமாறு அடக்கி எட்டிப் பற்றி அடக்குதற் கமைந்த அகங்காரம் மமகாரமாகிய இரண்டும் என் வழி பொருந்த நிறுத்தி எல்லா வகையான இனிய திருவருள் ஞான அமுதத்தை எனக்குப் பக்குவப்படுத்தி அளித்தருளுகின்றாய்; ஆதலால் அடியேன் உனக்கு அடைக்கலமாயினேன். எ.று.
கட்டுதல் - அறிவாகிய தறியின்கண் பிடித்து நிறுத்துதல். மனத்தை அடக்குதற்கு உரிய இடம் நல்லறிவாதலின் அதனை, “மனப் பரியைக் கட்டுமிடம்” என்று சொல்லுகின்றார். மட்டு - அறிவெல்லை. ஆங்காரம் மதம் ஆகிய இரண்டும் அடக்க அடங்காது ஓடும் இயல்பினவாதலால் அவற்றை, “என் மட்டுக் கடங்கா ஆங்கார மதமா” என்று கூறுகின்றார்; மதமா - மதம். ஆங்காரமாகிய மதயானை என்றற்கு, “ஆங்கார மதமா” என்று உரைக்கின்றார். அகங்காரம் மமகாரம் ஆகிய இரண்டும் அறிவால் அடக்கி ஆளத் தகும் இயல்பினவாதலால், “எட்டுக் கிசைந்த இரண்டு” என்று கூறுகின்றார். இவற்றை யான் எனது என்னும் இச்சைகள் என்பதும் உண்டு. திருவருள் ஞானத்தை “இன்னமுது” என இசைக்கின்றார். ஞானம் முழுதும் தமக்கு அருளப்பட்டமை புலப்பட, “எல்லா இன்னமுதும் அட்டுக் கொடுத்து அருத்துகின்றோய்” எனப் பாராட்டுகின்றார். (8)
|