4872.

    புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
    தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
   கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
    அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன்அடைக்கலமே.

உரை:

     கூடுதற்குரிய களபம் அணிந்த இரண்டாகிய கொங்கைகளையுடைய மகளிர் கூட்டமும் பொருளும் பூமியும் என்று சொல்லப்படும் பழமையான உலகியல் ஆசைகளாகிய கடலைக் கடந்து நீங்கச் செய்து எனது மனமாகிய கல்லும் கனிந்து உருகச் செய்து கருணையாகிய அமுதத்தை மகிழ்வோடு அளித்து இரவும் பகலும் எப்போதும் எனது உள்ளத்தின்கண் எழுந்தருளுகின்றாய்; ஆதலால் யான் உன் அடைக்கலமாயினேன். எ.று.

     களபம் - நறுமணம் கலந்த சந்தனக் குழம்பு. இளமகளிர் தமது மார்பின்கண் அணிந்துகொள்வது இயல்பாதலின் அவர்களை, “களபப் புணர்முலையார்” என்று கூறுகின்றார். புணர்ந்து பெறும் போகத்தைப் “புணர்ப்பு” என்று புகல்கின்றார். பொருள் எனப் பொதுப்படக் கூறினும் சிறப்புடைய பொன்னாசை என்று கொள்க. தொல்லுலகப் பேராசை என்பது தொல்லும் உலகப் பேராசை என்று குறிக்கப்படுகின்றது. தொல்லும் என்றவிடத்து உம்மை இசை நிறைத்தற்கண் வந்தது. உவரி - கடல். பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை ஆகிய மூன்றும் எளிதில் விலக்குதற்கு அரிய வல்லவாய் உலகியல் வாழ்வு தோன்றிய நாள் முதல் இடையறவின்றிப் பெருகி வருதலால் இம்மூன்றையும் “உலகப் பேராசை” எனவும், இவற்றின் ஆசை மக்களால் நுகர்ந்தே கழிக்கப்படுவதால் “உவரி கடத்தி” எனவும் உரைக்கின்றார். கனிதல் - குழைதல்.

     (9)