4877. என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
தன்னருள்தெள் அமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
வகுத்துரைத்துத் தெரிந்திடுக வருநாள்உன் வசத்தால்
உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
உரை: என்னை உடையவனாகிய சிவபெருமான் என்பால் வருகின்ற காலம் இதுவாகும்; நான் சொல்லும் இச்சொல்லில் எள்ளத்தனையும் சந்தேகமில்லை; என் உள்ளத்துள் எழுந்தருளி இருந்து
எனக்குத் தன்னுடைய தெளிந்த திருவருள் ஞானமாகிய அமுதத்தை அளிக்கும் தலைவனாகிய அப்பெருமானது மொழியாகும்; நான் சொல்லும் இது முக்காலும் சத்தியம்; நெஞ்சமே இதனை ஏற்றுக்கொள்வதற்கு நீ சிறிதும் மயங்க வேண்டியதில்லை; உலகத்து நிலைபெற்ற உயிர்கள் எல்லாம் இதனைக் கேட்டு மகிழ்ந்து வியக்குமாறு என் சொற்களை வகை வகையாக விளக்கி உரைத்து நீயும் தெரிந்து கொள்வாயாக; அப் பெருமான் வருகின்ற நாளை நுண்ணறிவால் முன்னுற எண்ணி முடியாதாதலால் இன்று சொல்லுவது அவனது திருமிக்க அருளுரை எனச் சுருங்க உணர்ந்து கொள்வாயாக. எ.று.
இறைவன் எழுந்தருளுகின்ற தருணத்தை இன்று நான் குறித்துரைப்பது பற்றிச் சிறிதும் ஐயம் கொள்ளற்க எனத் தமது நெஞ்சுக்குக் கூறுகின்றாராதலால், “இதற்கோர் எட்டுணையும் ஐயமிலை” என இயம்புகின்றார். இதற்குக் காரணம் என்னுள் எழுந்தருளிய அப்பெருமான் அருள் ஞானம் வழங்குகின்றானாதலின் அவன் வழங்குகின்ற ஞான மொழி என இதனை உணர்ந்துகொள்வாய் என்றற்கு, “என்னுள் இருந்து எனக்கே தன்னருள் தெள்ளமுது அளிக்கும் தலைவன் மொழி; இதுதான் சத்தியம் சத்தியம் சற்றும் மயக் கடையேல்” என்று வற்புறுத்துகின்றார். அப்பெருமான் என்னுள் இருந்து தனதுரை எனதுரையாக உரைத்ததால் இதனைப் பன்முறையும் எண்ணி வகுத்தும் உரைத்தும் தெரிவித்ததாலன்றி மயங்கும் இயல்புடைய உனக்குத் தெளிவு பிறவாது என்பாராய், நெஞ்சினை நோக்கி, “வகுத்துரைத்துத் தெரிந்திடுக” என மொழிகின்றார். அவன் வழங்கும் அருளுரையை அவனது அருள் மயமாய் நின்று காண வேண்டும் எனத் தெரிவிப்பாராய், “உன் வசத்தால் உன்னி உரைத்திட முடியாது” என்றும், இன்று உரைப்பது உன்பால் கொண்ட பேருபகாரம் என உணர்தல் வேண்டும் என்பாராய், “இன்று உரைத்திடுதல் உபகாரம் என உணர்ந்திடுக” என்றும் எடுத்துரைக்கின்றார். (3)
|