4881. மாயைவினை ஆணவமா மலங்கள்எலாம் தவிர்த்து
வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
தூயதிரு நாள்வருநாள் தொடங்கிஒழி யாவே.
உரை: மாயையும் கன்மமும் ஆணவ மலமுமாகிய மலங்கள் எல்லாவற்றையும் போக்கித் திருவருள் இன்ப வாழ்வளிக்கும் பெரிய அருளுருவுடைய வள்ளலாகிய சிவபரம்பொருள் என்பால் வந்தருளும் காலம் வந்தெய்தியது இதுவாகும்; நான் சொல்லும் இதில் ஐயம் சிறிதுமில்லை; இங்கே உலகத்தார் இதனை விரைந்து அறிந்து கொள்ளுமாறு மனமே நீ எடுத்துரைப்பாயாக; இதுதானும் தலைவனாகிய சிவபிரானுடைய திருவுள்ளக் குறிப்பாகும்; என் குறிப்பென்று நீ நினையா தொழிக; நாளைக்கு விரிவாக எடுத்துச் சொல்லுவோம் என எண்ணிக் காலத்தைக் கழிக்காதே; தூய திருவருட் சோதியினுடைய திரு நடனத்தைக் கண்டு மகிழ்கின்ற தூய திருநாள் வருகின்றபோது அது தொடங்கின் மடங்கி இடையறாது என அறிவாயாக. எ.று.
மாயை, கன்மம். ஆணவம் என மலங்கள் மூன்றும் பொதுப்பட மொழியப்படுவனவாதலின், “மாயை வினை ஆணவமாம் மலங்கள் எலாம் தவிர்த்து” என மொழிகின்றார். இவற்றைத் தவிர்த்தாலன்றித் திருவருள் ஞான இன்பம் எய்தாதென்பதுபற்றி, “மலங்கள் எலாம் தவிர்த்து” என்று எடுத்துரைக்கின்றார். வாழ்வு என எடுத்து மொழிவதால் திருவருள் ஞான இன்பப் பெருவாழ்வு என்பது பெறப்பட்டது. மலங்களோடு கலந்து நின்று மயங்கும் இயல்புடைமை பற்றி, “இதற்கோர் ஐயமிலை” என மனத்துக்குத் தெரிவிக்கின்றார். வள்ளலாகிய சிவபிரானுடைய திருவுள்ளக் குறிப்பு தவறாது என்பதுபற்றி, “நாயகன் தன் குறிப்பு இது என் குறிப்பென நீ நினையேல்” என்றும், காலம் தாழ்க்குமானால் மறதி சூழ்ந்து மறைக்கும் என உணர்த்துவாராய், “நாளைக்கு விரித்துரைப்பேம் என மதித்துத் தாழ்க்கேல்” என்றும் வற்புறுத்துகின்றார். அருட்சோதித் திருநடம் காண்கின்ற காலம் எய்துமிடத்து இடையறாது தொடர்ந்து நிகழும் எனவும், அப்பொழுது உலகத்தவர்க்கு எடுத்துரைக்க காலமும் இடமும் வாய்க்கா எனவும் கூறுவாராய், “அருட்சோதித் திருநடம் காண்கின்ற தூய திருநாள் வருநாள் தொடங்கி ஒழியா” என்று சொல்லுகின்றார். (7)
|