4883. ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
உரை: அறிவன யாதும் அறியாத சிறுவர்களில் மிகச் சிறியவனாகிய யான் இப்பெரிய செய்தியை உரைப்பதற்கு யான் யாராவேன்; என் இறைவனாகிய சிவபிரான் சொல்லுக என்று அருளியபடிச் சொல்லுகின்றேன்; என் மனமே, உள்ளத்தில் கேட்டுள்ளபடி நான் சொல்லும் இது சத்தியம் என்று உணர்ந்திடுக; நமது குற்றமெல்லாம் போக்கி நமக்கு வேண்டும் சித்திகள் எல்லாவற்றையும் நல்கி அருளுதற்குத் திருவருளாகிய பெரிய ஒளி யுருவை உடைய அப்பனாகிய பெருமான் நம்பால் வரும் காலம் இப்பொழுதே என்று உலகவர் அறிய அறியுமாறு விரைந்து உரைப்பாயாக; கேட்கும் எல்லோரும் களிப்படைந்து தமது மனம் இசைந்து ஏத்தி மகிழ்வார் காண். எ.று.
யாதும் என்பது ஏதும் என வந்தது. அறியத் தகுவனவற்றை அறியாத சிறுவர்கள் என்றற்கு, “ஏதும் அறியாச் சிறிய பயல்கள்” என்று குறிக்கின்றார். சிவபெருமானது வரவு கூறும் நல்லுரையிலும் பெரிய செய்தி வேறில்லை என்பாராய், “இப்பெரிய வார்த்தை தனக்கு யான் ஆர்” என உரைக்கின்றார். யான் உரைப்பது அப்பெருமான் யாவர்க்கும் எடுத்துரைக்க என்று இட்ட கட்டளையாகும் என வற்புறுத்தற்கு, “என் இறைவன் ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன்” என இயம்புகின்றார். அவன் வரவால் உலகவர் பெறும் பயன் இதுவெனத் தெரிவிப்பாராய், “தீது முழுதும் தவிர்த்து சித்தி எலாம் அளிக்க” என்று செப்புகின்றார். கேட்கும் மக்கள் பெருநலம் எய்தியதாக மகிழ்ந்து உள்ளம் இசைந்து அப்பெருமானை வழிபட்டு இன்புறுவர் என்பார், “எல்லாரும் களிப்படைந்து உள்ளிசைந்து ஏத்தியிட உலகம் அறிய விரைந்துரைப்பாய்” என்று விளம்புகின்றார். அப்பன் வருகின்ற தருணம் இக்கணமே எனத் தெளிவித்தற்கு, “அப்பன் வருதருணம் ஈதிதுவே” என்று எடுத்துரைக்கின்றார். இதுவே இதுவே என வரற்பாலதாகிய அடுக்குத் தொடர் ஈதிதுவே எனப்படுகின்றது. (9)
|