106. திருப்பள்ளி எழுச்சி
அஃதாவது, பரம்பொருளாகிய சிவபெருமான் தன்னுடைய சிவ மாநகரில் இருந்து உறங்குவது போலவும் விடியற் காலத்தில் தாம் சென்று பள்ளியினின்றும் எழுந்தருளுமாறு துயிலெடை நிலை பாடி எழுப்புவது போலவும் பாடுவது. பள்ளி என்பது படுக்கை. பள்ளியினின்றும் எழுந்தருளுக எனப் பாடுவது பாட்டுத் தோறும் கருத்தாதலால் இதற்குப் பள்ளி எழுச்சி என்று பெயர் கூறப்பட்டது. மாணிக்கவாசகப் பெருமான் தமது திருவாசகத்தில் இவ்வாறு கற்பனை செய்து மகளிர் பாடுவதாக உரைத்திருக்கின்றாராதலால், வள்ளற் பெருமானும் பாடுகின்றார். இதன்கண் தாம் ஒருவரே இத்துயிலெடைப் பாடுவதாகக் குறிப்பதும் தலைவனாகிய பரமசிவனை அப்பனாகவும் அம்மையாகவும் குருவாகவும் தெய்வமாகவும் அரசனாகவும் குறிப்பதும் நோக்கத் தக்கனவாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4885. பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்ஒளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
முழுதும்ஆ னான்என ஆகம வேத
முறைகள்எ லாம்மொழி கின்றமுன் னவனே
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
உரை: பொழுது விடிந்தது; என் உள்ளமாகிய மெல்லிய தாமரையும் மலர்ந்தது; எங்கும் பொன்னிறமான சூரியஒளி பரவிவிட்டது; எல்லாம் வல்ல என்னுடைய சற்குருவே; தொழுது நிற்கின்ற நான் செய்தற்குரிய பணிகள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லி அருளுதல் வேண்டும்; ஆகவே எல்லாமானவன் என ஆகமங்களும் வேத நெறிகளும் போற்றி உரைக்கின்ற முன்னவனே! எழுதுதற் கரிய சிறப்புடைய அருட்பெருஞ் சோதியாகிய எனக்குத் தந்தையே! பள்ளியினின்றும் எழுந்தருளுக. எ.று.
உள்ளத்தை தாமரை என்னும் மரபு பற்றி, “உள்ள மென்கமலம்” என உரைக்கின்றார். உதய சூரியனுடைய ஒளி பொன்னிற முடைய தாகலின் அதனைப் “பொன் ஒளி” என்று புகலுகின்றார். தொண்டு செய்ய வந்துள்ளேன்; யான் செய்தற்குரிய தொண்டுகளை எனக்கு உரைத்தல் வேண்டும் என்னும் கருத்தால், “செய்பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும்” என்று பராவுகின்றார். எல்லாப் பொருளும் ஆகியவன் என வேதங்களும் ஆகமங்களும் உரைப்பதால், “முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எல்லாம் மொழிகின்றன” என்றும், முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பொருளாதலால், “முன்னவனே” என்றும் மொழிகின்றார். அருட்பெருஞ் சோதி ஆண்டவனைத் தந்தையாகக் கொண்டு துதிக்கின்றமை புலப்பட, “என் தந்தையே பள்ளி எழுந்தருளுவாயே” என்று பாடுகின்றார். பரிபூரணன் என்பது பற்றி “முழுதும் ஆனான்” என வேதாகமங்கள் விளம்புகின்றன. முறை என்பது ஈண்டு நூல் என்னும் பொருளில் வந்தது. மூவர் முதலிகள் பாடிய நூல்கள் திருமுறைகள் எனப்படுவதும் இக்கருத்தே பற்றி என அறிக. (1)
|