4886. துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
உரை: அறிவை மறைத்து வருத்தும் மாயையாகிய இருள்போய் ஒழிந்தது; ஞானம் எழுந்து விளங்குமாறு பொன்னிற ஒளியைப் பரப்பிய சூரியனாகிய கதிரவன் ஞான குணம் என்கிற மலைமேல் உதயமாகி விட்டது; பெரிய சித்திகள் எல்லாம் உன் திருவடிக்குப் பணி புரிவான் வந்து சூழ்ந்து கொண்டன; நற்குணம் நிறைந்த சன்மார்க்க சங்கத்தார் எல்லாரும் திருமுன் வந்து உன்னைத் தோத்திரம் செய்துகொண்டு நிற்கின்றார்; எனக்குத் திருவருளாகிய அமுதை அளித்த அருட்பெருஞ் சோதியாகிய என்னுடைய அம்மையே! பள்ளியினின்றும் எழுந்தருளுவாய். எ.று.
துர்க்குணம் என வழங்கும் அறிவை மயக்குவது பற்றி, “துற்குண மாயை” எனப்படுகிறது. இஃது உலகியல் மாயை என்றும் சொல்லப்படும். செய்யுள் மரபாதல் பற்றி, துர்க்குணம் துற்குணம் என வந்துள்ளது. மாயை அகன்றாலன்றி ஞானம் பிறவாதாதலின், “ஞானம் தோன்றிட” என்று கூறுகின்றார். சிற்குணம், ஞானப் பேற்றுக்குரிய நற்பண்பு. ஞானம் திகழ்தற்கு உதயகிரி போலச் சிற்குணம் அமைவதால் அதனைச் “சிற்குண வரை” என்று செப்புகின்றார். கன்ம யோக ஞான சித்திகள் “மாசித்திகள்” எனப்படுகின்றன. ஞானவான்களுக்கு எல்லாம் இனிது செயல்படுதலின், “மாசித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த” என்று சொல்லுகின்றார். சூழ்ந்தனை என்பது அன்சாரியைத் தொக்கிச் சூழ்ந்த என வந்தது. ஞான அமுது அளித்தமை பற்றி, அருட் பெருஞ்சோதியை, “என் அருட்பெருஞ்சோதி என் அம்மை” என்று இயம்புகின்றார். (2)
|