4889. புன்மாலை இரவெலாம் புலர்ந்ததுஞானப்
பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
உரை: இருள் மாலைப் பொழுதில் தொடங்கும் இராக்காலம் கழிந்து விட்டது; ஞானமாகிய உதயகிரியின் மேல் பொன்னிறக் கதிர்களையுடைய ஞானச் சூரியன் எழுந்து விளங்குகின்றது; புலமைச் செல்வர்கள் சொல்மாலைப் புனைந்து ஓதித் துதிக்கின்றார்கள்; சுத்த சன்மார்க்கத்தைச் சேர்ந்த எல்லாரும் பெரிய மாலை போல வரிசையாக வந்து திருமுன் சூழ்ந்து பலப்பட நினைந்து துதிக்கின்றார்கள்; வானவர்கள் நெருங்கி நின்று வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றார்கள்; என்னுடைய சொல் மாலையையும் அணிந்தருளிய அருட் பெருஞ் சோதியாகிய என் தலைவனே! பள்ியினின்றும் எழுந்தருளுக. எ.று.
இருள் பரவும் அந்தி மாலையைப் “புன்மாலை” என்கின்றார். இருள் நீக்கி ஒளி பரப்பும் ஞாயிற்றை ஞானத் தோற்றத்திற்கு உவமை கூறுவது மரபாதலால், “ஞானப் பொருப்பின் மேல் பொற் கதிர் பொலிந்தது” என்று புகல்கின்றார். பொற்கதிர் - பொன்னிற ஒளியையுடைய சூரியனுக்கும் பொன்னிற மேனியை நல்கும் ஞானச் சூரியனுக்கும் பொருளாக வந்தது. புலவோர் புலமையைச் செல்வமாகப் பெற்றவர்கள் மாலை வரிசை வாடி உதிரும் பூமாலை போலாது நிலைபேறும் பெருமையும் உடைமை பற்றி மக்கள் வரிசையை, “மன்மாலை” என்று புகழ்கின்றார். வாழ்த்தி வணங்குகின்றார்கள் என்பதற்கு, “வாழி” (5)
|