4890.

     ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
          ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
     பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
          பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
     அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
          அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
     இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
          என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.

உரை:

     ஒருமைத் தன்மையின்கண் நின்று உலகவர் எல்லாம் ஓங்குக என்று சின்னங்கள் ஊதின; சங்குகள் முழங்கின; பெருமை பொருந்திய சமரச சுத்த சன்மார்க்கத்தின் பெரும் புகழை எடுத்துப் பலரும் பேசுகின்றனர்; பெரியவர்கள் அந்நெறியைத் தழுவி நிற்கின்றார்கள்; அருமையும் எளிமையுமாய் அன்றாய் அம்பலத்தின்கண் ஞான சித்தி பயக்கும் திருக்கூத்தாடுகின்ற முதல்வனே! இம்மையிலும் மறுமையிலும் நலமே புரிகின்ற அருட் பெருஞ் சோதியாகிய என் அருளரசே! பள்ளியினின்றும் எழுந்தருளுக. எ.று.

     பல நெறிகளில் சென்ற வழிக் கலக்கமும் தெளிவின்மையும் உண்டாதலால், “உலகெலாம் ஒருமையில் ஓங்குக” என்ற பொருள் படச் சின்னங்களும் சங்குகளும் விடியற்காலையில் ஒலித்தன என்பாராய், “ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்” என்று ஓதுகின்றார். சமரச சன்மார்க்கத்தால் எங்கும் பெருமையும் புகழும் விளைவது பற்றி, “பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்கப் பெரும் புகழ் பேசினர்” என்றும், சன்மார்க்கத்தின் பெருந்தன்மையினை அறிந்த பெரியவர்கள் அந்நெறியின்கண் சேர்ந்து நிற்பது விளங்க, “பெரியவர் சூழ்ந்தார்” என்றும் கூறுகின்றார். உணர்தற்கு அருமையும் ஓதி வழிபடுதற்கு எளிமையும் உடையதாதல் பற்றிச் சிவ பரம்பொருளை, “அருமையும் எளிமையுமாகி” எனவும், அறியாதவர்க்கு அரிய பொருளாதலும் ஞானிகட்கு எளிய பொருளாதலும் பற்றி, “அன்றாய்” எனவும் அறிவிக்கின்றார். இருமை - இம்மை மறுமை வாழ்வுகள். அம்பலத்தில் ஆடுகின்ற திருக்கூத்து கன்ம யோக சித்திகளையும், ஞான சித்திகளையும் நல்கும் சிறப்புடையதாதலின் அதனை, “பொது வகையில் சித்தி ஆடல்செய் பதியே” என்று தெரிவிக்கின்றார்.

     (6)