4893.

     மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
          வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
     அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
          அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
     தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
          சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
     இருள்அறுத் தெனைஆண்ட அருட்பெருஞ் சோதி
          என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.

உரை:

     மருட்சி உணர்வொடு கூடிய உலகியல் மாயையும் போய் ஒழிந்தது; பலவேறு மதங்களும் வாய் அடங்கிவிட்டன; தாமரைகளும் மலர்ந்தன; அருள் ஞான ஒளி பரந்து விளங்குகிறது; திருச்சிற்றம்பலத்தையும் அழகுறப் புனைந்துள்ளனர்; விளக்கமுற்று வீற்றிருக்கும்படியாகத் தெளிவும் ஞானப் பொருளும் மேன்மேலும் எனக்கு நல்கிச் சித்திகள் யாவும் எனக்குச் செய்யுமாறு திருவருள் செய்து எனது மனவிருளைப் போக்கி என்னை ஆண்டு கொண்ட அருட் பெருஞ் சோதியாகிய வள்ளலே! பள்ளியினின்றும் எழுந்தருளுக. எ.று.

     பசுபாசங்களால் உண்டாகும் மருட்கையை “மருள்” என்று குறிக்கின்றார். மாயை - உலகியல் வாழ்வு பயக்கும் மனமயக்கம். ஒன்றோடொன்று பிணங்கிப் பூசலிடும் சமயங்கள் ஒடுங்கிவிட்டன என்றற்கு, “மதங்கள் வாய் மூடிக் கொண்டன” என்று உரைக்கின்றார். சமரச சன்மார்க்கத்தை ஏற்ற நன்மக்கள் மனத்தே திருவருள் ஞானம் பரவி இருப்பது விளங்க, “அருளொளி விளங்கியது” என அறிவிக்கின்றார். அருட்சோதி ஆண்டவன் எழுந்தருளும் சிற்றம்பலமும் அழகுறப் புனைந்திருக்கின்றமை புலப்பட, “துலங்கி வீற்றிருக்க ஒரு திருச்சபையும் அலங்கரிக்கின்றனர்” எனப் புகலுகின்றார். இந்நிலையில் தாம் பெற்ற நலத்தை விளம்புதற்கு, “தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்களித்து” எனவும், அதன் விளைவாகத் தமக்குக் கன்ம யோக ஞான சித்திகள் கைவந்தமை தோன்ற, “சித்தெலாம் செய்திடத் திருவருள் புரிந்து” எனவும் இயம்புகின்றார். ஒளி தோன்ற இருள் கெடுவது போல அருட்சோதி ஆண்டவன் திருவருளால் தம்பால் இருந்த மனவிருள் போயிற்று என்பது உணர்த்துதற்கு, “இருள் அறுத்து எனை ஆண்ட அருட்பெருஞ் சோதி” எனப் புகல்கின்றார். இருள் அறுதலும் ஞான ஒளி விளங்குதலும் உடன் நிகழ்வன என அறிக.

     (9)