107. திருவுந்தியார்

    அஃதாவது, உந்தீ பறக்கும் மகளிர் விளையாட்டு வகையைக் கற்பனை செய்து ஆடுவது. இது பழங்கால மகளிர் விளையாட்டு. இவ்வகையில் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் பாடுவதும், வேதாந்த சித்தாந்த நூல்களில் சான்றோர்கள் பாடியிருப்பதும் ஈண்டு நினைவு கூரத் தக்கனவாம். அவர்கள் சொன்ன நெறியிலேயே வடலூர் வள்ளற் பெருமானும் இத்திருவுந்தியாரைப் பாடி அருளுகின்றார். இதன்கண் இம்மகளிர் விளையாட்டு இளங்காலைப் போதில் நிகழ்வதாகப் பாடுவது ஒரு சிறு வேறுபாடாகும். இனிவரும் பகுதிகளில் பாட்டுக்கள் எளிய நிலையில் அமைந்திருப்பது பற்றி அரிய சொற்றொடர்களுக்கு விளக்கம் தரப்படுகிறது.

கலித்தாழிசை

4895.

     இரவு விடிந்தது இணையடி வாய்த்த
     பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
          பாலமுது உண்டேன்என்று உந்தீபற.

உரை:

     இரவு விடிந்தது - இராக்காலத்தில் பரவிய இருள் நீங்கிற்று. இளங்காலைப் போதில் பெறப்படும் காட்சிகளில் இறைவன் திருவடிகளைக் கண்டு வணங்கி வழிபடுவோர்க்கு ஏற்புடையதாயிற்று என்பது புலப்பட, “இணையடி வாழ்த்த” என்று இயம்புகின்றார். இணையடி - இரண்டாகிய திருவடிகள். இறைவன் திருவடிகளைக் கண்டு வழிபட்டதினால் உண்டாகும் திருவருள் இன்பத்தை, “பாலமுது” என்று பாராட்டுகின்றார்.

     (1)