4897. தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
உரை: இரவுப் பொழுது விடிந்து பொழுது புலர்கிற வரையில், பரவி நிலவிய உறக்கம் ஒழிந்தது என விளக்குதற்கு, “தூக்கம் தொலைந்தது” என்றும், இனிச் செயற்குரியவற்றைச் செய்தற்கு ஊக்கம் அளிக்கும் செஞ்ஞாயிறு தோன்றிவிட்டது என்பாராய், “சூரியன் தோன்றினன்” என்றும் சொல்லுகின்றார். விடியற் போதில் பரவி இருந்த இருளைக் கண்டு இறைவன் திருவடியைக் கண்டு பரவித் திகழ்தற்கு இன்னும் ஞாயிறு தோன்றவில்லையே என்ற ஏக்கம் ஒழிந்து மகிழ்கின்றமை விளங்க, “சூரியன் தோன்றினன் ஏக்கம் தவிர்ந்தேன்” என்று கூறுகின்றார். தவிர்தல் - நீங்குதல். இன்னமுது - திருவருள் இன்பமாகிய இனிய அமுதம். (3)
|