4954. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
உரை: தான் பெற்ற மரணமிலாப் பெருவரத்தை உலகு நன்கறியும் என்பாளாய், “இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவாப் பெருவரம் யான் பெற்றுக் கொண்டேன்” என்று கூறுகின்றாள். தென்பால் - தென் திசை. சித்தாடுகின்ற திருநாள் - திருவருள் ஞானத்தைச் சிந்தையில் வைத்து வாழ்கின்ற திருநாள். திருவருள் ஞானத்தைச் சிந்தையில் வைத்து வாழ்கின்ற திருநாள் இன்று முதல் தொடங்கி விட்டது என்று தெரிவிப்பாளாய், “சித்தாடுகின்ற திருநாள் இது தொட்டுச் சேர்ந்தது” என்று தெரிவிக்கின்றாள். உலகியல் வாழ்வில் எய்தும் துன்பங்களை மறந்து மனத்தினின்றும் அவற்றைப் போக்கி என்னோடு சுத்த சன்மார்க்க ஞானம் உடையவனாய் அன்பும் அறிவும் நிறைந்து பந்தாடுவாயாக என்பாளாய், “துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவளாகி அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து” என்று சொல்லுகின்றாள். அசைந்தது நீக்கி - வருந்திய வருத்தங்களை மறந்து. ஒத்தவள் - மனமொத்தவள். (4)
|