4955.

     சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
          சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
     விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
          வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
     பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
          பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
     அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
          அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.     ஆடேடி

உரை:

     நான்காகிய வேதங்களையும் ஆகமங்களையும் வேறாகிய சாத்திரங்களையும் படிப்பதெல்லாம் ஆரவாரப் படிப்பே தவிர நம்முடைய ஆன்மானந்த படிப்பாகாது என்பாளாய், “சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ” என்று சொல்லுகின்றாள். விது நெறி - ஆஞ்ஞையாகிய ஆதாரந்தம். அதில் விளங்கும் அமுத சந்திரன் நல்கும் அமுத பானம் பெறுதற்குரிய சுத்த சன்மார்க்கத்தில் நின்று சாகாக் கலையாகிய ஞானத்தை நான் பெற்றுக் கொண்டேன் என்பாள், “விதுநெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன்” என்று கூறுகின்றாள். ஆதாரந்தத்தில் பெறலாகும் அமுத பானத்தை உண்டார்க் கன்றிச் சாகா வித்தையைப் பெறலரிது என இதனால் அறிவிக்கின்றார். உத்தரம் எனுமோர் பொது வளர் திசை - வடக்கு எனப்படுகின்ற ஞான சபை விளங்கும் வடக்குத் திசை. பொன்றாமை வேண்டிடில் - சாகா நிலைமை வேண்டுமானால். அதுவது என்னாமல் ஆடேடி - சுத்த சன்மார்க்கத்தை விடுத்து மணி மந்திர மருந்துகளை நாடாமல் ஞானப் பந்தினை ஆடுவாயாக என வற்புறுத்தற்கு, “நீதான் அதுவிது என்னாமல் ஆடேடி பந்து” என்று பாடுகின்றாள்.

     (5)