4958.

     சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
          செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
     உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
          ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
     தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
          தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
     அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
          அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.     ஆடேடி

உரை:

     தோழி, சிவமே பரம்பொருள் என்று உண்மையறிவால் அறிந்து கொண்டேன்; அதனால் செத்தாரை எழுப்புகின்ற திடமான நிலையையும் பெற்றுக் கொண்டேன்; ஒப்பு கூறுதற்கு இல்லாத ஒரு உண்மை நிலையில் ஒன்றென்றும் இரண்டென்றும் உணர்ந்துரைக்க மாட்டாத உண்மை நிலையில் நின்று திகழ்கின்றேன்; சிவத்தை நோக்கித் தவம் புரிகின்றவர் எல்லாப் பெருமக்களும் காணும்படியாக உன்பால் உள்ள அன்பால் உன்னை அழைக்கின்றேன்; நீ சிறிதும் வெறுப்படையாமலும் வீண் போகாமலும் என்னோடே கூடிப் பந்தாடுவாயாக; அந்நிலையில் உனக்கு அருட் பெருஞ் சோதி விளக்கமுறும்; அது கண்டு மகிழ்வால் பந்தாடுவாயாக. எ.று.

     சிவமே பரம்பொருள் என்ற உணர்வினால் செத்தாரை எழுப்புகின்ற நிலைமை தனக்கு வந்தது என்பாள், “சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்” என்று தெரிவிக்கின்றாள். உவமேயம் இல்லாத ஒரு நிலை என்பது சமரச சன்மார்க்க சங்கம். சமரச ஞான நிலையை, “ஒன்றிரண்டு என்னாத உண்மையில் நின்றேன்” எனக் கூறுகின்றார். தயவு - அன்பு. கயத்தல் - வெறுத்தல்; இது கசத்தல் என வழங்கும். அவம் போதம் - வீண் போதல்.

     (8)