4961.

     துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
          சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
     பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
          பாரிடை வானிடைப் பற்பல காலம்
     விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
          மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
     அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
          அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து

          ஆடேடி பந்து ஆடேடி பந்து
          அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.

உரை:

     முத்தர் - சீவன் முத்தர்கள். சித்தர் - சிவத்தைச் சிந்தையிலே வைத்துக் கொண்டிருக்கும் சிவஞானிகள். உத்தம ஞானப் பதி - உயர்ந்த சிவஞானச் செந்நெறித் தலைவராகிய சிவபரம் பொருள். சித்திகள் - கன்ம யோக ஞான சித்திகள். பாரிடை வானிடைப் பற்பல காலம் விதி செயப் பெற்றனன், மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் எண்ணிறந்த காலம் இருந்து விளங்க அருளாணை பெற்றுள்ளேன்; நீ அருள் ஞான ஒளியைக் கண்டு யான் செய்யும் அவ்வதிசயங்களைக் காணலாம்.

     (11)