4974.

     நினைக்க நினைக்க தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
          நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
     எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
          எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     நினைக்குந் தோறும் நினைக்குந் தோறும் என்னுடைய நெஞ்சில் இன்பம் ஊறிப் பெருகுகிறது என்பாராய், “நினைக்க நினைக்கத் தித்திப்பு எனது நினைவில் கொடுக்குது” என்று பாடுகின்றார். நெஞ்சம் நடுக்குது - மனம் நடுங்குகிறது. என்னைத் துன்பம் நீக்கி ஆட்கொண்டருளிய நின்னை எனக்கு அன்னையே என்று சொல்லுவேனோ என்பது கருத்து. எந்தாய் அன்பிலேன் நின்னடிக்கு முன்னை அன்பனோ, எந்தையே உன் திருவடிக்கு அன்பில்லாதவனாகிய எனக்கு அருள் புரிகின்றாயாதலால் நான் உனக்கு முன் பிறவியில் அன்பு செய்தேனோ.

     (12)