4976.

     நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி பே
          நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
     நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
          நாய்க்குத் தவீசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     பலநாள் முயன்றும் காண்பதற்கரிதாகிய உன்னுடைய பரம நிலையை எனக்குணர்த்திப் பின்னர் என் அகத்திலும் புறத்திலும் உன் அருளொளியை நிலவுவித்து என் உள்ளத்தில் நடுநிலையை நாடிய உன்னுடைய திருவருளுக்கு என்மேல் என்ன விருப்பமோ அறிகிலேன்; நாய் இருக்க அதற்கு ஆசனம் இட்டது போல எனக்கு அருள் வாழ்வு நல்கிய உனக்கு இது திருவருள் விளையாட்டுப் போலும்.

     (14)