4977.

     நரகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே
          ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே
     சாகாக் கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே
          சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     நரகாதிபன் - இந்திரன். அயன் - பிரமன். நறுநறு என்னவே - வாய்க்குள் முணுமுணுத்தல். இது பொறாமையால் விளைவது. இந்திரன் முதலிய தேவர்கள் பொறாமையால் முணுமுணுக்கு மாறு எனக்கு ஞான அமுதம் அளித்தாய்; நானும் அதனை உண்டு உனது திருவருளை அடைந்தேன் என்பது கருத்து. ஏதும் வியவையே - வியக்கத் தக்க பொருள் ஏதும் இல்லை.

     (15)