4979.

     தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே
          தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே
     புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனதர் மதிக்க வே
          புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கினேன்; தலையை நிமிர்த்திக் கால்களை உயர்த்திப் பலபட வேறுபடச் செருக்கித் திரிந்தேன்; குற்றமுண்டாக ஒழுகிய என்பால் தயவுகூர்ந்து நீ செய்த திருவருளை நினைக்கும்போது என் உடம்பும் உள்ளமும் உருகுகின்றன; புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர், புலால் உண்பது உயிர்க் கொலை செய்வதும் இல்லாத நன்னெறியில் ஒழுகுகின்ற தூயவரான சான்றோர். அப்பெருமக்கள் நன்கு மதிக்குமாறு அவர்களுடைய சன்மார்க்க சங்கத்தில் என்னைப் புகுத்தி விட்டாயாதலால் உன்னைத் துதித்து வணங்க என் வாய் துடிக்கிறது என்பது கருத்து.

     (17)