4980. தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே.
எனக்கும் உனக்கும்
உரை: தருணத் தந்தை - சமயத்தில் அருள் புரிந்த தந்தை. கிளர்வது எனது சிந்தை - பொங்கி எழுகிறது எனது மனம். நினைத்தது முடித்துக் கொடுக்கும் நீர்மை பற்றிச் சிவபரம்பொருளை, “நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்பனே” என்று பாராட்டுகின்றார். சிவநேசம் முன்னைத் தவத்தால் விளைவதாகையால், “நான் செய்தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்பனே” என்று நவில்கின்றார். (18)
|