4992.

     அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
          அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
     செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
          செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அமுதம் அளித்தாய் - அருள் ஞானமாகிய அமுதம் அளித்தாய். செறிவிலாத பொறியும் மனமும் - அடங்குதலில்லாத கண் முதலிய இந்திரியங்களும் மனமும். சாகாக் கல்வி தெரித்தாய் - சாகாமைக் கேதுவாகிய கல்வி ஞானத்தை எனக்குத் தெரிவித்தாய்.

     (30)