4999.

     உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே
          உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே
     தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே
          சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     உடையாய் - என்னை அடிமையாகவும் எல்லா உலகங்களையும் உடைமையாகவும் உடையவனே. உன்னுதல் - பலகாலும் நினைத்தல். பொன் மலையது என்னவே - பொன் மலை போல் உடம்பு பூரிக்கின்றது. தடையாது - தடையாக நிற்கும் மலகன்மங்கள் ஒன்றும் இல்லையாம். உன்மூலமலம் - உள்ளத்தே படிந்திருக்கும் ஆணவ மலம். சமய விகற்பம் - சமய வேறுபாடு. சமமதாயிற்று - எம்மதமும் எனக்குச் சம்மதம் என்பதாம்.

     (37)