5000.

     மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே
          மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே
     உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே
          உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     மயக்குந் தோறும் - ஊன மலகன்மங்கள் மயக்கம் விளைவிக்கும் தோறும். உயங்கு மலங்கள் - வருத்துகின்ற மலங்கள். மலங்கள் ஐந்தாவன; ஆணவம், கன்மம், மாயை, மாமாயை, மாயேயம் என்பனவாம். பொற் சோதி - அழகிய அருள் ஞான சோதி.

     (38)