5008.

     பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
          பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
     ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
          இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     பரம ஞான அமுதம் - மேலாகிய சிவஞானம் நல்கும் அமுதம். ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவது என்பர் - எல்லா உயிர்களும் நீ பொருந்தி அமைவதற்கு உனக்குப் பொது இடம் என்று சான்றோர் கூறுவர். இன்று நோக்கி ஓரவாரன் என்பர் - இன்று நீ என்பால் இருப்பது நோக்கி நீ ஓரமும் வாரமும் உடையவன் என்று சொல்லுவார்கள். ஓரம் - வாதி பிரதிவாதி என்ற இருவரிடை ஒருவர் பக்கம் சாய்ந்து நீதி செய்வது. வாரம் - அன்பு. வாரன் - ஒருபால் அன்புடையவன்.

     (46)