5011.

     எட்டும் இரண்டும் இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே
          எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே
     துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே
          தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மைச் சாற்றி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     எட்டும் இரண்டும் இது - அகர வுகரங்கள் கூடிய ஓங்கார வெளி இதுவாகும். எட்டா நிலை - பசுஞான பரஞானங்கட்கு எட்டாத நிலை. துட்ட வினை - துன்பம் தரும் வினைகள். உள்ஞானச் சுடரேற்றி என்றும் தூண்டாது விளங்க வைத்தாய் - ஞானமாகிய விளக்கை உள்ளத்தில் ஏற்றி வைத்துத் தூண்டப் படாமல் எக்காலத்தும் விளங்க ஒளிரும்படி அருளினாய்.

     (49)