5012.

     அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
          அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
     பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
          போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவனாய் - திருவருளாகிய ஞானாகாசத்தில் வடிவுடைய அருட் சோதி வடிவுடையவனாய். பரமயோகி - சிவயோகியர் எல்லார்க்கும் மேலான யோகியாய் விளங்குபவனே. புனித நாதன் - தூய தலைவன். நாத முடிவில் நடஞ் செய் கமல பாதனே - சி்வதத்துவத்தின் முடிவில் விளங்கும் நாதாதீதத்தில் ஞான நடனம் புரிகின்ற தாமரை போன்ற திருவடிகளை உடையவனே.

     (50)