5047.

     இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே
          எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே
     கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே
          களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     மேலேற்றும் இறைவன் - சிவயோகத்தில் இருக்க வைக்கும் இறைவன். கரவு நினையாது - வஞ்சித்தலைக் கருதாமல். சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவன் - சன்மார்க்கமாகிய ஞான நெறியில் நிலைபெற இருப்பிக்கும் துணைவன்.

     (85)